“2009 மே 17ஆம் திகதியும் புலிகளுடன் ராஜபக்ச குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நடவடிக்கைக்குப் பின்னர், ராஜபக்சக்களின் முகத்தைப் பார்த்துப் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினை இன்றும் நீடிக்கிறது” என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
“நாம் 30 வருடங்கள் போர் செய்தோம். நான்காவது ஈழப்போருக்கு முன்னர் நாம் என்ன செய்தோம் என்பது படையினருக்குத் தெரியும். அப்போது தூரநோக்குச் சிந்தனை இருக்கவில்லை.
வடக்கில் தாக்குதல் நடத்தச் செல்ல வேண்டுமெனில், கிழக்கிலிருந்து படையினர் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர், தாக்குதல் இடைநடுவில் நிறுத்தப்படும்.
நான் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னரே, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற தூரநோக்குச் சிந்தனையின் அடிப்படையில் வியூகங்கள் வகுக்கப்பட்டன.
இறுதிப்போரின்போதும் எனது காலை வாருவதற்கு அரசியல்வாதிகள் முயன்றனர். பயங்கரவாதிகளை 10 கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கி வைத்திருந்தபோது, 2009 ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 1ஆம் திகதி வரை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புலிகள் தாக்குதல் நடத்தினர். எமது பாதுகாப்பு வலயம் சீர்குலைந்தது.
அடுத்ததாக, பயங்கரவாதிகளை 400 மீற்றருக்குள் முடக்கி வைத்திருந்தபோதும், மே 17ஆம் திகதி ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் புலிகளுடன் சரணடைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாட்டு மக்கள் பாற்சோறு சாப்பிடத் தயாராக இருந்த வேளையில், ராஜபக்ச குடும்பத்தினர் புலிகளைச் சரணடையச் செய்து, அதன் மூலம் பிரசாரம் செய்து தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முயன்றனர். இப்படிப்பட்டவர்களுடன்தான் நாம் பணியாற்ற வேண்டியிருந்தது.
இறுதிக்கட்டப் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, ராஜபக்ச குடும்பத்தினரின் முகத்தைப் பார்த்துப் பேசுவதை நிறுத்தினேன்” என்றார் சரத் பொன்சேகா.