இலங்கையில் கொத்துக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொத்துக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.
ஒஸ்லோ உடன்படிக்கை என அழைக்கப்படும் கொத்துக் குண்டுகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி கையொப்பமிட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழான இலங்கையின் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவது தொடர்பில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்டமூல வரைவு, பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கும் வகையில் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக அடையாளம் காணப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி, திருத்தப்பட்ட சட்டமூல வரைவைத் தயாரிப்பதற்கான கொள்கை ரீதியான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.