தொழிற்சங்க நடவடிக்கைகள், மாணவர் போராட்டங்கள் மற்றும் மக்களின் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய சட்டமூலங்கள் தொடர்பில் எவருக்கேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அது குறித்து உயர்நீதிமன்றத்தை நாட முடியும். எமது அரசாங்கம் ஒருபோதும் மக்கள் விரோதமான சட்டமூலங்களைக் கொண்டுவராது. மக்களை ஒடுக்குவதற்கும் நாம் ஒருபோதும் முயற்சிக்கமாட்டோம்.
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 48 குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகளை ஒடுக்க வேண்டிய எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன பாதுகாக்கப்பட்டுள்ளன.
மக்களைத் திசைதிருப்பும் நோக்கிலேயே எதிர்க்கட்சியினர் போலியான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்” என்றார்.