நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
குறுகிய கால பொருளாதார உறுதித்தன்மையை அடைதல் என்ற அடிப்படை நோக்கத்தைத் தாண்டி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம், நீடித்த பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டமைப்பு அபிவிருத்தியை நோக்கிய பாதையில் பயணிக்கிறது.
இதற்காக 2,000 பில்லியன் ரூபா மூலதனச் செலவின ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையின் 81-வது வரவு செலவுத் திட்டமாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் சவாலை வெற்றிகரமாகக் கடந்த பிறகு, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கம், விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதும், அதன் பலன்களை எவரையும் விடுபடச் செய்யாமல் பொதுமக்களுக்குச் சமமாகப் பகிர்ந்தளிப்பதுமே ஆகும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், வெறும் ஆண்டு அரச வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிக்கும் ஒரு செயலாக மட்டுமன்றி, நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மூலோபாயக் கொள்கைக் கட்டமைப்பாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கேற்ப, உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பொருளாதார உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் முன்னுரிமை அளிக்கும் என்றும் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டங்களின் மூலம் இலக்கு வைத்த பொருளாதார சாதனைகள், எதிர்பார்க்கப்பட்ட அளவைத் தாண்டி வெற்றிகரமாக எட்டப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் நவம்பர் 13 முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை, மொத்தம் 26 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
2027-ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம், நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை, ஏழு நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 20 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
2027-ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதம் நான்கு சனிக்கிழமைகள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு, நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம்திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன்பிறகு, டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
வாக்கெடுப்பு நடைபெறும் நாட்களான நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 14 ஆகிய நாட்களைத் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலான நேரம், அவை ஒத்திவைக்கப்படும் வேளையில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்படும்.
கடந்த வரவு- செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவு அதிகரிப்பு முன்மொழிவு இடம்பெற்றது. இம்முறை வரவு- செலவுத் திட்டம் பற்றி மலையக மக்களும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். காணி மற்றும் வீடு திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் பற்றி அறிவிப்புகள் வெளிவருமா என அவர்கள் காத்திருக்கின்றனர்.