அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது வெளியிட்டார்.
தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றும் அருணி ரணராஜா, வொஷிங்டனில் இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் முக்கிய இராஜதந்திரப் பதவிகளில் ஒன்றான அமெரிக்கத் தூதுவர் பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்,
“ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுக்கான தூதுவர் பதவிகளில் தற்போது வெற்றிடங்கள் உள்ளன. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பெண் தூதுவரை நியமிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தற்போது அமைச்சின் செயலாளராகப் பணியாற்றும் அருணி ரணராஜாவை அமெரிக்காவுக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக நியமிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாடுகளில் இலங்கையின் இராஜதந்திரப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் பல நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
இலங்கையின் பிரதம நெறிமுறை அதிகாரி ரோஹன அம்பகொல்ல, நவம்பர் 27ஆம் திகதி கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பொறுப்பேற்கச் செல்லவுள்ளார்.
அத்துடன், சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இராஜதந்திரி, நவம்பர் 28ஆம் திகதி நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் முன்னிலையாகவுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவருக்கான நியமன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகின் முக்கிய நாடுகளில் உள்ள இலங்கையின் இராஜதந்திரப் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுக்கான முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளமை இலங்கையின் இராஜதந்திர வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.