தமிழர்களின் கலாசாரம் மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குவேட்டை நடத்துவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றும் நிலைப்பாட்டில் நான் இல்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று ஆரம்பமான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பௌத்த நாட்டுக்குள் ஏனைய மதங்களுக்கும் உரிய இடத்தை வழங்குவதற்கு நாம் தயார். அதனை நாம் நிச்சயம் செய்வோம். மாகாணசபை முறைமையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கப்போவதில்லை.
வடக்கில் உள்ள பெற்றோரை, இளைஞர்களை தேர்தல் காலங்களில் ஏமாற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. முடியும் என்பதை நாம் நிச்சயம் செய்வோம். முடியாது என்றால் அது முடியாதுதான்.
தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாப்போம். மொழி உரிமை பாதுகாக்கப்படும். ஆனாலும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்தையும் நிறைவேற்ற முடியாது .
வரி சுமைகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும். புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை பலப்படுத்த வேண்டும். நாட்டில் பயிரிடக்கூடிய அனைத்து பயிர்வகைகளையும் பயிரிட வேண்டும்.” – என்றார்.