“ தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது எடுபிடிகளாக பயன்படுத்தக்கூடும். வடக்கு, கிழக்கு தமிழர்கள் புத்திக்கூர்மையானவர்கள். அவர்கள் சாணக்கியமான முடிவையே எடுப்பார்கள்.” – என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தமிழ் பொதுவேட்பாளர் விவகாரமானது தவறான உபாயம் என்ற தெளிவு அவர்களுக்கு நிச்சயம் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன். தமிழர்களின் பிரச்சினை ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டது. இனியும் சர்வதேச மயப்படுத்துவதற்கு ஒன்றுமில்லை.
இன்னுமொருவருக்கு வாக்கு சேர்ப்பதற்கான உபாயமாக தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது எடுபிடிகளாக இவர்களை பயன்படுத்தக்கூடும்.
பொது வேட்பாளர் விவகாரத்தை விக்னேஸ்வரன்தான் அதிகம் பேசி திரிந்தார். அவர் திடீரென ஜனாதிபதியின் விசுவாசியாக மாறினார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்தார். சிலருக்கு தமிழரசுக் கட்சியுடன் பகை உள்ளது. அதற்கான பழிவாங்கல் நடவடிக்கையாக இதனை செய்திருக்கலாம். சில போராளிக்கட்சி தலைவர்கள் இது விடயத்தில் கையறு நிலையில் உள்ளனர்.
தமிழ் மக்களின் வாக்கு வங்கியை விரயமாக்கும் வேலையே இந்த பொதுவேட்பாளர் விவகாரமாகும். வடக்கு, கிழக்கு தமிழர்கள் புத்தி கூர்மையானவர்கள், விவேகமானவர்கள். எனவே, மக்கள் உரிய முடிவை எடுப்பார்கள். வெல்லும் வேட்பாளரை வைத்து சாத்தியமான விடயங்களை சாத்தியமாக்கிக்கொள்வதற்கு முற்பட வேண்டும்.” – என்றார்.