தெற்கு அரசியலில் புதிய கூட்டணிகளின் உதயம், கூட்டாக கட்சி தாவல்கள், குதிரைப் பேரம் என தரமான அரசியல் சம்பவங்கள் அரங்கேறப்போகும் காலப்பகுதியாக அடுத்தவாரம் அமையவுள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டணி எதிர்வரும் 6 ஆம் திகதி உதயமாகவுள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ளதுடன், அன்றைய தினம் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 07 ஆம் திகதி பெயரிடப்படவுள்ளார். தம்முடன் கூட்டு வைத்திருந்த பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதி ரணில் பக்கம் நிற்பதால், புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பையும் அன்றை தினம் மொட்டு கட்சி விடுக்கவுள்ளது.
இதற்கிடையில் எந்த பக்கம் செல்வது என்பது குறித்து முடிவெடுப்பதில் திணறிவந்த – மதில்மேல் பூனையாக செயற்பட்ட ராஜித சேனாரத்ன, ரொஷான் ரணசிங்க, டலஸ் அழகப்பெரும, அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டவர்களும் தமது அரசியல் தீர்மானங்களை இவ்வாரம் எடுக்கவுள்ளனர். கட்சி தாவல்களுக்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.