2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருந்தால் இந்நேரம் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி அம்பாறையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 2005 ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு 50.03 சதவீத வாக்குகளே கிடைக்கப்பெற்றன. 0.3 வீதம் என்பதற்குள் 28 ஆயிரம் வாக்குகளே இருந்தன.
சிலவேளை அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்று ஜனாதிபதி ஆகி இருந்தால்,ஐக்கிய நாடுகள் சபையில் 192 ஆவது நாடாக ஈழம் தேசம் இடம்பெற்றிருக்கும். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்தால்தான் நாடு பாதுகாக்கப்பட்டது.
அதேபோன்றதொரு தேர்தலே இம்முறையும் நடைபெறுகின்றது. எனவே, நாட்டை பாதுகாக்கும் முடிவை மக்கள் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி எடுக்கவேண்டும்.
இலங்கை வரலாற்றில் இம்முறையே மகா கூட்டணி உதயமாகியுள்ளது. இதற்கு முன்னர் இப்படியான பாரிய கூட்டணி அமையப்பெறவில்லை. இனம், மதம், மொழி ரீதியில் பிளவுபடாமல் இலங்கையர்களாக ஒன்றுபடுவோம்.” – என்றார்.