இலங்கையில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் உள்ளுராட்சிசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி இரவு 9 மணியில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ். மாநகரசபை உட்பட 339 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 8 ஆயிரத்து 287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இலங்கை நேரப்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.
அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 75,589 வேட்பாளர்கள் களம் கண்டிருந்தனர்.
கடந்த காலங்களில்போன்று பாரியளவில் தேர்தல் விதிமுறை மீறல்களும் இடம்பெறவில்லை.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தமக்கு மக்கள் ஆணை இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக குட்டி தேர்தலிலும் பெரு வெற்றியை எதிர்பார்க்கின்றது.