யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது மேலும் இரண்டு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அகழ்ந்து எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 18 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 4 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அகழ்ந்து எடுப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைவிட 4 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின்போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.