சர்வஜனக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோள விதைகளை பகிர்ந்தளித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எம் சந்திரசேன இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையானார். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எம். சந்திரசேன மஹிந்த ஆட்சியில் முக்கிய அமைச்சராக விளங்கினார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தார். மொட்டு கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தார்.
அதேவேளை, எஸ்.எம். சந்திரசேனவின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியோரும் மோசடி சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.