போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் படையினரை தண்டிக்கும் நோக்கிலேயே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ராஜபக்சக்களும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ போர் முடிவடைந்து 15 வருடங்களுக்கு பிறகு ஏன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்துக்கமைய இதுவரை ஏழு சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம் என அந்த பட்டியல் நீள்கின்றது. மேற்படி ஏழு சட்டங்களையும் செயற்படுத்தும் நோக்கிலேயே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
57 பேரின் பட்டியலை யஸ்மின் சூக்கா தயாரித்துவிட்டார். அதில் 47 படையினரும் உள்ளனர். அந்த பட்டியலை காட்டி அச்சுறுத்தியதால்தான் கோட்டாபய ராஜபக்சவை விரட்டுவதற்கு இவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.
இலங்கையில் தமிழ்ச் செல்வன் இருந்த இடத்தை இலக்கு வைத்து குண்டுபோட்ட எமது புலனாய்வு பிரிவுக்கு, காலியில் இருந்து கொழும்புக்கு பெருந்திரளான மக்கள் வருவது தெரியாதா? இராணுவ பிரதானிகளுக்கு இது தெரியாதா? போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் அவர்கள் உள்ளனர். அதை வைத்துதான் அமெரிக்க தூதுவர் அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமுலுக்கு வந்தால் படையினர் தண்டிக்கப்படுவார்கள். இச்சட்டமூலத்துக்கு மஹிந்த தரப்பும் முதலாம் வாசிப்பின்போது ஆதரவு வழங்கியுள்ளது. இராணுவம் நாட்டைம Pட்டதால்தான் சுதந்திரமாக வாழ்கின்றோம். எனவே, படையினரை பலிக்கடாவாக்க இடமளிக்கமாட்டோம். நூறு வருடங்கள் சென்றாலும் இது பற்றி பேசுவோம்.” – என்றார்.