முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் எனக் கூறப்படும் இளம் குடும்பஸ்தரான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ்ஜின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கபில்ராஜ்ஜின் உடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் இதன்போது இராணுவத்தின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏசுமந்திரன் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.