" குறுகிய அரசியல் தேவைப்பாட்டுக்காக வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அரசியலுக்காக முன்னெடுக்கப்படுகின்ற இந்நடவடிக்கைக்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரவளிக்ககூடாது."
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியில் இராணுவ முகாமொன்றுக்குள் ஐவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இவர்களை விரட்டுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிடிபட்ட நபரொருவர் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு நபர்கள் தப்பிச்செல்லும்போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு பாரிய காயங்கள் காரணமில்லை என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விரிவான ஆய்வுகள், விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. அரசாங்கமும் சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
விரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இச்சம்பவம் தொடர்பில் தகவல்களை தரிவுபடுத்தியும், போலி தகவல்களை பரப்பியும் சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றன. இராணுவத்தால் சிவில் நபரொருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற கருத்தை சமூகமயப்படுத்த முற்படுகின்றனர்.
தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக இவ்வாறு செயற்படுகின்றன. எனவே, சம்பவத்தின் உண்மை நிலைவரம் என்னவென்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன், அரசியல் குழுக்களின் போலி பிரசாரத்தை ஏற்காது, தமது இயல்பு வாழ்க்கை செயற்பாடுகளை, நடவடிக்கைகளை நாளை (இன்று) வழமைபோல் முன்னெடுக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நாடு மேம்பட்டுவரும் நிலையில் அமைதி மிக முக்கியம். அதேபோல அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம்." - என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ.