ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, எமது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலேயே வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது - என்று இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இவ்வாறு அறிவித்தார்.
" ஞாயிற்றுக்கிழமை விசேட ஊடக சந்திப்பை நடத்தி, சம்பவம் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம் அளித்ததால்தான் நிர்வாக முடக்கல் நடவடிக்கை பகல்வரை மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சிதான் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. வடக்கு, கிழக்கில் 100 சதவீதம் கடையடைப்பு இடம்பெறவில்லை என்பதை ஏற்கின்றோம். 60, 70 சதவீதமான கடைகள் மூடப்பட்டன. இலங்கை தமிழரசுக் கட்சியென்பது ஜனநாய வழியில் அரசியல் செய்யும் கட்சியாகும். எனவே, கடைகளை மூடுமாறு எவரையும் பலவந்தப்படுத்த முடியாது. " எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
எனவே, ஹர்த்தால் தோல்வியென தெற்கில் உள்ள எவரேனும் கூறுவராயின், முடிந்தால் வடக்கு, கிழக்கைதவிர ஏனைய மாவட்டமொன்றில் நகரமொன்றில் 10 கிராம சேவகர் பிரிவுகளிலாவது ஹர்த்தாலை வெற்றிகரமாக நடத்திக்காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதோ, ஆட்சியைக் கவிழ்ப்பதோ அரசியல் ஸ்தீரதமற்ற தன்மையை ஏற்படுத்துவதோ எமது நோக்கம் அல்ல. எமது சாதாரண கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிடுத்து, தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும், காணிப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், அநாவசியமான இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், புதிய அரசமைப்பு வேண்டும் என்பன உள்ளிட்டவையே எமது கோரிக்கைகளாகும்." - எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.