சர்வதேசம் ஏற்கக்கூடிய நம்பகரமான உள்ளக பொறிமுறை ஊடாக பொறுப்புக்கூறல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதற்கு வெளியக அழுத்தங்கள் தேவையில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக ஐந்தாண்டுகால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
' மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நபரொருவரின் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக்கொண்டு மனித உரிமைகளை மீறுவதற்கு எமக்கு எவ்வித அரசியல் தேவைப்பாடும் கிடையாது.
நாட்டின் அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அதற்காக சட்டங்கள் வலுப்படுத்தப்படும். தேவையேற்படின் புதிய சட்டங்கள் இயற்றப்படும்." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நல்லிணக்க செயற்பாட்டை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. தேசிய சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஐந்தாண்டுகள் வேலைத்திட்டம் உள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியும் இதற்கு கிடைக்கப்பெறும். இத்திட்டத்துக்கமைய நாம் முன்னோக்கி செல்வோம்.
பொறுப்புக்கூறல் உள்ளக பொறிமுறை ஊடாகவே வலுப்படுத்தப்படும். இதற்கு வெளிநாட்டு தலையீடுகள் அவசியமில்லை. ஏனெனில் தேசிய நடவடிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாக உள்ளது. எவ்வித அழுத்தங்களும் நீதிமன்றத்துக்கு பிரயோகிப்பதில்லை.சுயாதீனமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இதனால்தான் பல வருடங்களாக மூடி மறைக்கப்பட்ட - இழுத்தடிக்கப்பட்டுவந்த வழக்குகள் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதிமன்ற சுயாதீனம் காரணமாகவே இது நடந்தது. பதவி உயர்வு, இடமாற்றம் என்பனவெல்லாம் முறையாக நடக்கின்றன. பொலிஸாருக்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதில்லை." எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கையில்லாததால்தான் வெளியக பொறிமுறை கோரப்பட்டது. ஆனால் இன்று அந்நிலைமையை மாற்றியுள்ளோம். அந்தவகையில் சர்வதேசம் ஏற்கக்கூடிய நம்பகரமான உள்ளக பொறிமுறை ஊடாக பொறுப்புகூறல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் தேவைப்பாடுகளுக்காக இடம்பெற்ற கொலைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சமபவம், ஊடகவியலாளர்கள் கொலை, என்பன தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. எந்தவொரு சம்பவத்தையும் நாம் மறக்கவில்லை. சுயாதீன விசாரணைகள் இடம்பெறுகின்றன.
எனவே, அனைவராலும் ஏற்கக்கூடிய வகையில் பொறுப்புகூறல் சுயாதீனமாக இடம்பெறும். தற்போது இடம்பெற்றும் வருகின்றது." - என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.