" யாழ். நூலகம் எரிப்பு, கறுப்பு ஜுலைக் கலவரம் என்பன தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய நபர்தான் ரணில் விக்கிரமசிங்க. மேற்படி சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறு குற்றத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படும் கருத்தை முழுமையாக நிராகரித்துவிட முடியாது.”
இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கூறினார்.
யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ரணில் விக்கிரமசிங்க சிறு குற்றத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் நியாயம் உள்ளது. ஏனெனில் 1977 இல் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடுகள்தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட வேண்டியவர். அது நடக்கவில்லை.
ரணில் அமைச்சரவையில் இருந்தபோது 1981 ஆம் ஆண்டு யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர். அதுவும் நடக்கவில்லை.
கறுப்பு ஜுலை நடக்கும்போதும் அமைச்சரவையில் இருந்தார். அவரும் பொறுப்பு கூறவேண்டும். அச்சம்பவம் தொடர்பிலும் கைது செய்யப்படவில்லை.
அதேபோல 2015 இல் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை அவரது ஆட்சியில்தான் நடந்தது. அது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவற்றுடன் ஒப்பிடுகையில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் சிறு குற்றம்தான் என்பதை ஏற்கின்றோம்." - எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எமது ஆட்சியில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லை. ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது.
அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று கேட்கின்றோம்.” - எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார்.