அரியாலை செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நேற்று மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இதனால் மேலும் பல என்புத் தொகுதிகள் மீட்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.
செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி நடவடிக்கைகள் நேற்றுத்திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. இதன்போதே, புதைகுழியின் அகழ்வெல்லை அகலிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதைகுழியில் இருந்து இதுவரை 150 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவை அனைத்தும் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் அகழ்வுப்பணிகள் தொடரவுள்ளன.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது அகழ்வுப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்தக் கோரிக்கை நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது.
அதற்கான பாதீட்டைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, புதைகுழியின் அகழ்வெல்லை அகலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.