குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரின் நோய் நிலைமையைக் கருத்தில் எடுத்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், இன்று அவருக்குப் பிணை வழங்கியது.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கிரமசிங்க இன்றைய வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. அவர் சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் ஆஜரானார்.
ஆரம்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் உயிராபத்து ஏற்பட்டுள்ளது எனவும், எனவே அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவரைப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கியது.
அதன்படி, சந்தேகநபரைத் தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.