வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களில் நாளை பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதன் நீட்சியாக இம்முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.