இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு இடமளிக்கும் வகையில் சட்டம் இயற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கை அரசமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரிமையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின்போது நடைமுறைப்படுத்தப்படும்.
வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு.
சமகால தேர்தல் சட்டங்களின்கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ அல்லது சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை.
எனினும், இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகள் தமது வெளிநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டரீதியான மூலோபாயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையிலும் அவ்வாறான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டிலுள்ள பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிருவாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பொதுநிருவாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.