தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஒற்றையாட்சி” அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயற்சிக்கின்றது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.
எனவே, எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஒற்றையாட்சி” அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை - சுவிஸ்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த 14 - 21 ஆம் திகதி வரை சுவிஸ்லாந்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இச்செயலமர்வில் பங்கேற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவ்வேளையிலேயே நிஹால் அபேசிங்கவின் கருத்தை மறுத்ததுடன் தாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருவதாகவும் விளக்கமளித்திருந்தார்.