" ஜெனிவா விவகாரமானது கடந்த காலங்களில் அரசியல் உதைப்பந்தாட்டமாகவே பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. அவ்வாறானதொரு நிலையை நாம் ஏற்படுத்தமாட்டோம்." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எமது நாட்டு மக்களுக்குரிய சுதந்திரம், உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்." - எனவும் அவர் கூறினார்.
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். ஜெனிவா தீர்மானத்துடன் உடன்படவில்லை என்பது திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டது.
கடந்தகாலங்களில் இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் பற்றி சர்வதேசத்துக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாகவே உள்ளது என்பதை கடந்த ஒரு வருடமாக நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். எவ்வாறான குற்றச்சாட்டாக இருந்தாலும் எமது நீதிமன்ற கட்டமைப்புக்குள் விசாரித்து, நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எமது நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்ட மறுசீரமைப்புகள் அவசியம் எனில் அதனையும் செய்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." -என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.