" தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும், இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்."
- இவ்வாறு இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
" மாகாண சபைத் தேத்தல் தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு நான் இணைந்து அண்மையில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தேன். மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக எந்த வகையான காரணமும் சொல்லி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வைக்க வேண்டும்,
இந்தக் கோரிக்கையை அனைத்து தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் இலங்கையினுடைய அனைத்து கட்சிகளோடும் இணைந்தும் தனித்தனியாக முன் வைக்க வேண்டும் என்ற இணக்கத்தோடு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது என்று என்று நான் நினைக்கிறேன்." எனவும் அவர் கூறினார்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இலங்கை மக்கள் அனைவருடைய கோரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நடத்தப்பட வேண்டிய தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது.
ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மாகாண ஆட்சிக்கான தேர்தலை அரசை நடத்த வைப்பது, எப்படி நாங்கள் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும், மாகாண ஆட்சிக்கான அதிகாரங்களை எப்படி முழுமையாக முறையாகவும் பெற்றுக்கொள்வது என்பது பற்றியதுமான கலந்துரையாடலாகவே அமைந்தது என வரதராஜப்பெருமாள் மேலும் கூறினார்.