தமிழ் பொதுவேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய அரியநேத்திரனுக்கு யாழ். தேர்தல் மாவட்டத்தில் அமோக ஆதரவளிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 489 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முதலிடத்தை தவறவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 177 வாக்குகளும், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 688 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 84 ஆயிரத்து 558 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 27 ஆயிரத்து 88 பேர் வாக்களித்துள்ளனர்.
நாமல் ராஜபக்சவுக்கு யாழ். மாவட்டத்தில் 800 வாக்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எனினும், கே.கே. பியதாச என்பவருக்கு 6 ஆயிரத்து 74 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. கல்க்லெட்டரே அவரது சின்னம், அதனை தொலைபேசியாக கருதி வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எனினும், 3 லட்சத்து 97 ஆயிரத்து 41 பேரே வாக்களித்திருந்தனர். இதில் 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.