🛑 டில்லி விஜயம்: ஹர்ச டி சில்வா, மனோவை சஜித் கைவிட்டு சென்றது ஏன்?
தனது டில்லி பயணத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் ஓரிரு எம்.பிக்களையேனும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தன்னுடன் அழைத்து செல்லாமை தொடர்பில் பல கோணங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் அதிருப்தியில் இருந்தாலும், கட்சி தலைவரின் இந்த நகர்வு பற்றி அவர்கள் வெளிப்படையாக இன்னும் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பிக்கவில்லை.
கொழும்பிலுள்ள எதிரணி அரசியல் தலைவருக்கு அவ்வளவு எளிதில் டில்லி இராஜதந்திர அழைப்பை விடுப்பதில்லை. அவ்வாறு விடுத்தாலும் அதில் ஏதோவொரு சமிக்ஞை நிச்சயம் வெளிப்படுத்தப்படும்.
சஜித் மட்டும்தான் வரவேண்டுமென டில்லி நிபந்தனை விதித்திருக்கும் என நினைக்க முடியாது. எனவே, எதிரணியில் நிழல் வெளிவிவகார அமைச்சர், நிழல் நிதி அமைச்சர் ஆகியோரையாவது சஜித் அழைத்து சென்றிருக்க வேண்டும். அதேபோல இக்குழுவில் மலையக எம்.பியொருவரையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் மலையக எம்.பிக்கள் இல்லை என்பதால் அக்கட்சியுடன் கூட்டு வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனையாவது அழைத்து சென்றிருக்க வேண்டும் என்பதே பொதுக்கருத்தாக உள்ளது.
சஜித்தின் டில்லி விஜயம் தொடர்பில் "ஹிரு" தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாளர் கலாநிதி ஹர்ச டி சில்வாவிடம் கேள்வி எழுப்பட்டது. அவர்தான் நிழல் நிதி அமைச்சராகக் கருதப்படுகின்றது.
ஹர்சவிடம் எழுப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு,
கேள்வி - இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பிரகாரமா சஜித் பிரேமதாசவின் விஜயம் இடம்பெற்றது?
🛑பதில் - அவ்வாறுதான் நாமும் அறிகின்றோம்.
கேள்வி – அறிகின்றோம் எனக் கூறுகின்றீர்களே….நீங்கள்தானே கட்சியின் பொருளாளர்?
🛑பதில் - அவ்விஜயம் பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை.
கேள்வி - ஏன் தெரிந்திருக்கவில்லை?
🛑பதில் - எனக்கு மட்டும் அல்ல அவ்விஜயம் பற்றி எவருக்கும் தெரியாது. எனக்கு தெரியப்படுத்தவும் இல்லை. இந்திய விஜயம் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தேன்.
கேள்வி - இப்படியான விஜயத்தின்போது அடுத்த அரசாங்கத்தின் நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் தானே?
🛑பதில் - இதற்கு பதிலளிக்க முடியாது.
கேள்வி – ஏன் இந்திய பிரதமரை சந்திக்க முடியாமல்போனது?
🛑பதில் - எனக்கு தெரியாது.
கேள்வி - இந்திய விஜயம் தொடர்பில் விஜயத்தின் பின்னராவது தெளிவுபடுத்தப்பட்டதா?
🛑பதில் - இதவரை இல்லை.
ஹர்ச டி சில்வாவின் பதில்கள்மூலம், தனது கட்சி எம்.பிக்களுக்குகூட டில்லி பயணம் பற்றி சஜித் தெரியப்படுத்தவில்லை என்பது தெளிவாகின்றது. அதேபோல கட்சிக்குள் உள்ளக மோதல் உள்ளது என்பதும் புலனாகின்றது.
நாகரீகமான அரசியல்வாதியாக ஹர்ச டி சில்வா கருதப்படுவதால், அவர் தலைமைத்துவம் குறித்து வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்காவிட்டாலும், அவர் வழங்கிய பதில்மூலம் "அதிருப்தி" நிலையை உணரமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவுக்கும் சஜித்தான் முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள் உள்ளது.
ஏற்கனவே இரு ஜனாதிபதி தேர்தல்களில் சஜித் தோற்றுவிட்டார். அவரது தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் விமர்சனம் இல்லாமல் இல்லை. அடுத்த தலைவர் என்ற அந்தஸ்த்து ஹர்ச டி சில்வாவுக்குதான் உள்ளது. அதனால்தான் அவர் சில விடயங்களின்போது ஓரங்கட்டப்படுகின்றார் என்ற கருத்து உள்ளது.
ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா போன்றவர்களும் சஜித்தின் தலைமைத்துவம்மீது நம்பிக்கை இல்லாததால் ஏற்கனவே கட்சி: கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டனர். சிலவேளை நுகேகொடை கூட்டத்துக்கு பின்னர் உள்ளக மரண்சரிவு ஆரம்பமாகக்கூடிய நிலையும் உள்ளது.
ஆர்.சனத்