திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை பௌத்த பிக்குகள் குழுவொன்று, திருகோணமலை கடற்கரைக்கு வந்து, வழிபாடுகளை மேற்கொண்டதுடன், புதிதாக விகாரை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
சிறி சம்புத்த ஜயந்தி போதிவர்த்தன பௌத்த ஆலயம் என்ற பெயரில் பாரிய பெயர்ப்பலகையும் அந்த இடத்தில் நாட்டப்பட்டிருந்தது.
அனுமதியின்றி கட்டப்படும் விகாரை தொடர்பாக, கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால், சிறிலங்கா காவல்துறையில் முறையிடப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காவல்துறை அதிகாரி ஒருவர், சம்பவ இடத்துக்குச் சென்று, பௌத்த பிக்குகளை சமாதானப்படுத்த முயன்ற காணொளி ஒன்று வெளியாகியிருந்தது..
நேற்று இரவு வரை விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்தன.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
“திருகோணமலையில் எந்த அனுமதியும் இல்லாமல் ஒரு புதிய வழிபாட்டு இடம் கட்டப்பட்டு வருகிறது.
அதிகாலையில், துறவிகள் குழு கடற்கரைக்கு வந்து கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.
சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நம்பி, கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையில் முறைப்பாடு செய்த போதும், சட்டத்தை அமுல்படுத்துவதற்குப் பதிலாக, வேலையை நிறுத்துமாறு பௌத்த பிக்குவை சமாதானப்படுத்த ஒரு காவல்துறை அதிகாரி முயற்சிப்பதை காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
ஆனால் இரவு 8 மணி நிலவரப்படி, கட்டுமானம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்து பொதுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் நான் தெரிவித்துள்ளேன்.
யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்ற தேசிய மக்கள் சக்தியின், வாக்குறுதி, புத்த பிக்குகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது தெளிவாகப் பொருந்தாது.“ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்றிரவு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக புத்தர் சிலையுடன் விகாரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளையும் சிங்களவர்களையும் அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இதன்போது இருதரப்புக்கும் இடையில் கைகலப்பும் இடம்பெற்றுள்ளது.
புத்தர் சிலையை கைப்பற்ற முயன்ற காவல்துறை அதிகாரியை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கியுள்ளார்.
எனினும், புத்தர் சிலையை காவல்துறையினர் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதுடன், கடற்கரையில் கூடியிருந்தவர்களையும் விரட்டியுள்ளனர்.