வடக்கு, கிழக்கில் பல இடங்களில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நவம்பர் 21 முதல் 27 வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இம்முறை மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவுத் தூபி முன்பாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.