தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரா இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சரின் சொத்துக்கள் குறித்து, பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வலியுறுத்தி ஜமுனி கமந்த துஷாரா முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி, அமைச்சர்கள், நளிந்த ஜெயதிஸ்ஸ, பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜெயக்கொடி, சுனில் ஹந்துனெத்தி மற்றும் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு முடிவு செய்துள்ளது.
அதேவேளை, 2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதியை தவறாகப் பயன்படுத்திய ஊழல் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஏற்கனவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.