ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிச்சயம் போட்டியிடுவார், கடைசி நேரத்தில் பின்வாங்கப்போவதில்லை என்று புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
“ தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் இந்திய தரப்பில் நேரடியாக எவ்வித கருத்தும் முன்வைக்கப்படவில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் இது உங்களின் உள்பிரச்சினை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர், இது பற்றி நாங்கள் கேட்டபோதுகூட அந்த பதிலே வந்தது. என்னிடம் எவ்வித கருத்தும் கூறப்படவில்லை. வேறு தரப்பினர்களிடம் கூறினார்களா என தெரியாது.
தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஆராய்வதற்கு, பணிகளை முன்வைப்பதற்கு குழுவொன்று உள்ளது, அந்த குழுவால் விரைவில் அதற்குரிய பணி செய்து முடிக்கப்படும். எமது பிரச்சினை தீர்க்கப்படவில்லை, அது இன்னமும் கொதி நிலையிலேயே உள்ளது என்பதை தென்னிலங்கைக்கும், உலகுக்கும் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.” – என்றார்.