“ மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.” என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்று யாழில் சந்தித்து பேசிய நிலையில் குறித்த விடயத்தை எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
“ அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம்.
அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசாங்கம் கூறிவருகிறது. எவ்வளவு தூரத்திற்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை .
இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்கலாம் என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.
இது சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபட போகிறது. இதன் பொழுது தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம்.” எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசத்தினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது.
மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தோம். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது எங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. அது முழுமையான தீர்வு அல்ல. நாங்கள் ஏற்றுக் கொண்ட தீர்வும் அல்ல.
அது பல குறைபாடுகளோடு இயங்கினாலும் ஏழு எட்டு வருடங்களாக அது இயங்காமல் இருந்தது. அது அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயம்.
ஜனாதிபதி தேர்தல் அறிக்கையிலே ஒரு வருட காலத்துக்குள்ளே மாகாண சபை தேர்தல்களை நடத்தி முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.
அப்படி வாக்குறுதி கொடுத்து இருந்தும் கூட இப்பொழுது ஒரு வருடம் நிறைவடைந்து அதற்குப் பிறகு நான்கு மாதங்களும் ஆகியும் இன்னமும் மாகாண சபை தேர்தல் வைப்பதற்கான அறிகுறி கிடையாது. அதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது .” என சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.