நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களினால் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார்.
அத்துடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவதற்கு, இரண்டு வார காலஅவகாசத்தைத் தருமாறும் அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக, இன்று காலை 9 மணிக்கு காவல்துறை நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ‘சிரிலிய’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.