சர்ச்சைக்குரிய கிவுல் ஓயா திட்டமானது, தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற நன்கு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது என்று தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
"மகாவலி அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, கிவுல் ஓயா நீர்த்தேக்கமானது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரவில் உள்ள தமிழர்களின் பூர்வீக கிராமங்களுக்கு அண்மையாக அமைக்கப்படவுள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும்.
மகாவலி அதிகார சபை தனது திட்ட அறிக்கையில் வெளிப்படையாகவே இந்த நீர்த்தேக்கத்தின் பயனாளிகள் 3 ஆயிரத்து 203 சிங்களக் குடும்பங்கள் எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தால் பாரம்பரிய தமிழ் கிராமங்களான வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காஞ்சூரமோட்டை போன்ற கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது.
மேலும் 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயாவினுள் மூழ்கிப்போகவுள்ளது என்பதனை மகாவலி அதிகார சபையின் திட்ட அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் மூடிமறைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், "தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் பொய்" என்று கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்தை தமிழர் மரபுரிமைப் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. இவர்கள் வடக்கில் மக்களை அரவணைப்பது போல் நாடகமாடி முதுகில் குத்தும் வேலையை கச்சிதமாகச் செய்து வருகின்றார்கள்.
இலங்கைத் தீவில் நிலையான அபிவிருத்தி, சமாதானம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் போராடுவார்கள்." - என்றுள்ளது.