இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அரசியலமைப்பு பேரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு பேரவை அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது.
இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் தொடர்பான நியமனம் இழுபறி நிலையிலேயே இருந்து வந்தது.
குறித்த பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்மொழியப்பட்ட நான்கு பேரை, அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
இந்நிலையிலேயே இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன?
அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதன் தலைவராக சபாநாயகர் (ஜகத் விக்ரமரத்ன) செயல்படுவார்.
பிரதமர் (ஹரிணி) , எதிர்க்கட்சி தலைவர் (சஜித்) ஆகியோர் பதவி நிலை உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் (விஜித ஹேரத) அங்கம் வகிப்பார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தெரிவுசெய்த மேலும் இரு உறுப்பினர்கள் இருப்பார்கள். (அஜித் பெரேரா, ஆதம்பாவா)
அதற்கு மேலதிகமாக மூன்று சிவில் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்கும் கட்சியை சாராத, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். (சிறிதரன்)
தேசிய தேர்தல் ஆணைக்குழு
அரச சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
மனித உரிமைகள் ஆணைக்குழு
இலஞ்சம் , ஊழல் ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு
கணக்காய்வு ஆணைக்குழு
தேசிய பெறுகை ஆணைக்குழு
மேற்படி ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியலமைப்பு பேரவையே முக்கிய வகிபாகத்தை வகிக்கும்.
பிரதம நீதியரசர்,
உயர்நீதிமன்ற நீதியரசர்கள்,
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள்
சட்டமா அதிபர்,
பொலிஸ்மா அதிபர்,
கணக்காய்வாளர் நாயகம்,
ஒம்புட்ஸ்மன்,
நாடாளுமன்ற செயலாளர் நாயகம்
ஆகியவற்றுக்கான நியமனங்கள், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே இடம்பெறும்.
ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவெடுப்பதை, இந்த ஏற்பாடு தடுத்தது.