இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட பின்னரே எனக்கு எதிராக கட்சிக்குள் இருந்தே உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு முற்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழு விசாரிக்கட்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்க தயார் எனவும் அவர் கூறினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசியலமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறிதரன் வாக்களித்தார் என பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதாவது நான் எட்டு தடவைகள் இராணுவத்தை தெரிவுசெய்துவிட்டேன் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு பேரவையில் நடக்கும் விடயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்த முடியாது. எனவேதான் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியுள்ளேன்.
வடக்கு, கிழக்கிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் என்னை விசாரிக்கட்டும்.
சிறிதரன் தமிழ் இனத்துக்கு எதிராக செயல்பட்டார், இராணுவத்துக்கு சார்பாக செயல்பட்டார் என்பதை உரிய ஆவணங்கள் சகிதம் நிரூபித்தால் அரசியல் இருந்தே நான் ஒதுங்கி விடுகின்றேன்.
அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்றவர்கள் இதனை செய்கின்றனர்.
தலைவர் காட்டிய கட்சியே தமிழரசுக் கட்சி. அதனால்தான் அக்கட்சியில் இணைந்தேன். நானாக தமிழரசுக் கட்சியில் இருந்து விலகமாட்டேன். என்னை வெளியேற்றுவதற்கு முயற்சிக்கலாம். அவர்கள் வெளியேற்றினால் அது பற்றி மக்கள் முடிவெடுப்பார்கள்.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.