உலக மொழிகளில் தமிழ் படைப்புகள்
மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியம் !
-சிட்னி நூல் வெளியீட்டில் மாத்தளை சோமு.
" தமிழ் எழுத்தாளர் படைப்புகள் உலகின் பல மொழிகளிலும், குறிப்பாக ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக உருவாக்கப்பட வேண்டும். ஏன் எனில் இதன் மூலமே எதிர்கால சந்ததியானது எங்கள் இலக்கிய படைபப்புகளை வரும் காலத்திலும் அறிந்து கொள்ள முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவே தமிழ் படைப்பாளிகளின் நீண்ட அவாவாகும் என மூத்த எழுத்தாளர் மாத்தளை சோமு, சிட்னியில் நிகழ்ந்த ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
குறிப்பாக இன்று நடக்கும் தாயக நிகழ்ச்சிகளையும், தமிழ் படைப்புகளை பற்றிய எல்லா விதமான நிகழ்வுகளையும் ஆங்கில ஊடகம் மூலம் தெரிவித்து கொள்வதன் மூலமாக உலகம் பூராக எங்கள் தாய்மொழியான தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றிக் கொள்ளலாம். இந்த உறுதியை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து கொள்வதன் மூலமே எதிர்கால சந்ததியினர் வரலாற்று ரீதியான தமிழ் மொழி வளர்ச்சிக்கு வழிவகுப்பார்கள்.
இன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது வெளிவந்த அனைத்து நூல்களும் சர்வதேச அரங்கில் நடந்த போராட்டங்களின் வெறும் பார்வையாக மட்டுமே கருதிவிடமுடியாது. இவை அனைத்தும் இன்றைய சந்ததியினர்க்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படிப்புனைகளாக அமைகின்றன.
சர்வதேச அரங்கில் நடந்த, நடக்கும் மக்களின் போராட்டங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆறு நூல்களையும் எளிய இலகுவான எழுத்தோட்டத்தில் ஐங்கரன் விக்கினேஸ்வரா சிறப்பாக படைத்துள்ளார்.
சர்வதேச அரங்கில் ஐந்து கண்டங்களில் நடந்த போராட்டங்களை பற்றிய பார்வைகளை இந்த நூல் இந்த நூல்கள் விவரமாக விவரிக்கின்றன. அதேவேளை இந்தியாவை ஒரு துணை கண்டமாக கருதி அங்கு நடந்த, நடக்கும் தேசிய போராட்டங்களை பற்றிய பார்வையை எழுத்தாளர் ஐங்கரன் மிக்க நன்றி சிறப்புற விளக்கியுள்ளார்.
தொடர்ந்து இத்தகைய நூல்கள் ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுவதன் வாயிலாக, எங்கள் எதிர்கால சந்ததியினர் உலக அறிவை பெற்றுக் கொள்வார்கள் என அவுஸ்திரேலியாவில் தமிழுக்காக நீண்டகாலம் பணியாற்றும் மூத்த எழுத்தாளர் மாத்தளை சோமு, சிட்னியில் நிகழ்ந்த ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றினார்.
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெள்ளிக்கிழமை (27/2/26) மாலை பெமுள்வே சமூக மண்டபம் (Allan G Ezzy Community Centre,(Near Woolworths) 1 Newport St, Pemulwuy, NSW 2145. எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை வெளியீட்டு நிகழ்வு பெருந்திரளான சிட்னி தமிழ் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மூத்த எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் அறிமுக உரையை கவிஞர் திரு. குவேந்திரன் அவர்கள் உரையாற்றினார். அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை சிட்னி இலக்கிய ஆர்வலர்கள் வழங்கினார்கள்.
தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள் எனும் நூலுக்கு திரு. திரு. அநதீரன் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்தினார். ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும் என்ற நூலை திருமதி. பைந்தளிர் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்தினார்.
முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் குறித்த நூல் ஆய்வை திரு.ம.தனபாலசிங்கம்
அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்தினார். அத்துடன் இந்நிகழ்வில் வாழ்த்துரையை
பேராசிரியர். ஆசி.கந்தராஜா அவர்களும் உரையாற்றினார்.
இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூல் குறித்த ஆய்வை
திரு. கிருஷ் ஆனந்த் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்தினார். அத்துடன் இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள் பற்றிய நூலாய்வை திருமதி தேவி பாலா அவர்கள் நிகழ்த்தினார்.
மேலும் தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் என்ற நூலை திரு. பொன்ராஜ் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்தினார். அத்துடன் இந்நிகழ்வில் சிறப்புரையை சிட்னியின் புகழ்பெற்ற வானொலி ஒலிபரப்பாளர் திரு. திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களும் உரையாற்றினார். சிட்னி மாநகரில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்தினார்.