மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும், அந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் இன்று (16) விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர், அமைச்சர்கள் , அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு,
“ ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் சுங்கம் உட்பட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இயங்கும்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு புதன்கிழமை விடுமுறை தினமாகும்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கப்படுமவரை நிறுத்தப்பட்டுள்ளன.
தனியார் துறையினருக்கும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலைமையைக் கையாள்வதற்கு நான்கு விசேடக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருந்தாலும், எதிர்கால நிலைமையைக் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டது.