ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் குறித்தும் கலந்துரையாடினேன்.
இந்தியா-இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட முக்கிய முன்னெடுப்புகளின் முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்.
நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளிகளாக, பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்.“ என்று அந்தப் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலுடன் தொடர்புடைய எரிசக்தி விநியோக இடையூறுகள் குறித்த உலகளாவிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.