"உத்தரவாதம் இல்லாத புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய தீர்வு பற்றிப் பேசும் நாம், ஏற்கனவே அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவதில் என்ன தவறு இருக்கின்றது?" என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறான சூழலில், எதிர்காலத்தில் வரக்கூடிய ஒன்றுக்காகத் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கும் அதேவேளை, ஏற்கனவே சட்டத்திலுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது அவசியமானதாகும்.
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் கூட்டு முயற்சியில் கஜேந்திரகுமார் ஆரம்பத்தில் இணங்கினார். இப்போது அவர்கள் பிறிதொரு குழுவாகத் தனித்துச் செயற்படுவதாக இருந்தால், அந்தப் பேரவையின் கூட்டு முயற்சியில் இணைந்திருப்பதா, இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பிலும் இது குறித்துப் பேசப்பட்டது. அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தம் குறித்துப் பேசக்கூடாது என்று எவருக்கும் சொல்ல முடியாது எனச் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சகலரும் அங்கு சுட்டிக்காட்டினர்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த ஆவணங்களைத் தயாரிப்பது கடினமானதல்ல. ஏற்கனவே பல ஆவணங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதை விட யதார்த்தமான நகர்வுகள் முக்கியம்." - என்றார்.