யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 8ஆம் நாள் அகழ்வின் போது, சிறு குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு உட்பட 5 புதிய என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய அகழ்வின் போது அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் என்புத் தொகுதி மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதால், அதனை மண்ணிலிருந்து தனியாகப் பிரித்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, தடயவியல் நிபுணர்களால் குறித்த என்புத் தொகுதி விசேட இரசாயனங்கள் மூலம் பதப்படுத்தப்பட்டு, பண்டேஜ் துணிகளால் சுற்றப்பட்டு மண்ணுடன் சேர்த்து முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.
என்பு ஆய்வுகளின்போது இப்பொதிகள் பிரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
அண்மையில் அடையாளம் காணப்பட்ட சவப்பெட்டியை ஒத்த அமைப்பிலிருந்து நேற்று மிக முக்கியமான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்தப் பெட்டியின் எல்லைகளுக்குள் இருந்து மனித என்புத் தொகுதி ஒன்று மீட்கப்பட்டது.
அதன் கழுத்துப் பகுதிக்கு அருகில் நாணயக்குற்றி ஒன்றும், வலது கைக்கு அருகில் சிதைவடைந்த காப்புத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
பெட்டியின் மூலைகளில் இருந்த ஆணிகளும் சான்றுப் பொருட்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து மொத்தமாக 255 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் 249 என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை நடந்த 8 நாள் அகழ்வுகளில் சில நாணயக் குற்றிகள், தங்க ஆபரணம் எனச் சந்தேகிக்கப்படும் பொருள் மற்றும் சிதைந்த காப்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட கறுப்பு நிற மணலிலிருந்து எரிந்த நிலையிலான எலும்புத் துண்டுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் முறையாக இலக்கமிடப்பட்டு, நீதிமன்றக் கட்டுக் காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நீதித்துறை மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.