சுவிட்சர்லாந்தில் இருந்து விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்த முதியவர் ஒருவர், சண்டிலிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
நீண்ட காலமாகத் தனது குடும்பத்துடன் சுவிஸில் வாழ்ந்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் இவருடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில், உறவினர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, உடலில் பல வெட்டுக்காயங்களுடன் சந்திரசேகரம் சடலமாகக் கிடந்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்காணிப்பு கமரா பதிவுகளின்படி, கடந்த 14ஆம் திகதி இரவு முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் முதலில் கமராக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் மோப்ப நாய்களிடம் இருந்து தப்பிக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் முதியவரின் உடலில் 8 இற்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.
முதியவரைக் கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு மல்லாகம் நீதிவான் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பில் கொலையாளிகளைக் கைது செய்யப் பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.