பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் போர்காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அதனை போர்க்குற்றமாக கருதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் ரவூப் ஹக்கீம் கூறியவை வருமாறு,
“பிரபாகரனின் மகன் படுகொலை: சனல் 4 ஆவணப்படம் பொய்கூறுகிறது என பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிராகரிக்கின்றது என தமிழ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாலச்சந்திரன் தொடர்பான படங்கள் பல வெளிவந்துள்ளன. முதலில் பதுங்கு குழியில் உணவுடன் அமர்ந்திருப்பதை போன்ற படம் உள்ளதுடன், அடுத்த படத்தில் அவரின் உடல் துப்பாக்கி சன்னங்களின் ஓட்டைகளுடன் கிடக்கும் படம் உள்ளது.
பயங்கரவாதியின் மகனாக இருந்தாலும் இவ்வாறு நடக்கக்கூடாது. ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகன் கொல்லப்படவில்லை. அவரது குடும்பம் பாதுகாக்கப்பட்டது. எனினும், ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்கள் தமது தலைவரை மறந்துவிட்டனர்.
அத்துடன் சஹ்ரான் உயிரிழந்தபோதும் அவரது மகள் பாதுகாப்பாக இருக்கின்றார். ஏன் பிரபாகரனின் மகன் மட்டும் கொல்லப்பட்டார்?
போர்க் காலத்தில் பிரபாகரின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக்குற்றமாக கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.” – என்றார் ரவூப் ஹக்கீம்.