யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினத்தில் புதிய எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படாத போதிலும், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளே இவ்வாறு முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று யாழ். நீதிவானின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 மனித எலும்புக்கூடுகளில், மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்குவதுடன், அவற்றில் 3 மனித எலும்புக்கூடுகள் முழுமையற்ற சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
செம்மணி அகழ்வாய்வுப் பணிகளின்போது ஒரே நாளில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வின் 9 நாள்களும், இரண்டாம் கட்ட அகழ்வின் 45 நாள்களும், தற்போதைய மூன்றாம் கட்ட அகழ்வின் 32 நாள்களும் என மொத்தமாக இதுவரை 86 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த 86 நாள்கள் தொடர் அகழ்வாய்வுகளின் மூலம், அங்குள்ள தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டில் இருந்து ஒட்டுமொத்தமாக இதுவரை 409 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தத் தளங்களில் இதுவரை மொத்தமாக 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது, மனித எலும்புகளுடன் இரும்பிலான பெரிய வளையம் போன்ற பொருள் ஒன்றும், கூர்மையான ஆணிகளும், கறுப்பு நிறத்திலான பாசி மணிகளும் உள்ளிட்ட மூன்று முக்கிய சான்றுப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் விசாரணைகளுக்காக நீதிமன்றக் கட்டுக்காவலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி நேற்றைய தினத்தோடு தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.
சிறிய இடைவெளியின் பின்னர், இம்மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்டப் பகுதி எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.