கிளிநொச்சி , பளை வனப்பகுதியில் நடப்பது பற்றி அரசாங்கத்திற்குத் தெரியாது என்றும் மௌனம் காக்கின்றது என்றும் தவறான தகவல்களைப் பரப்பி, சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலேயே குறித்த நபர் போலித் தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும், அங்கு புலி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், குறித்த சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சந்தேகநபர் மோசடி வழக்குகள் உட்பட மூன்று வெவ்வேறான குற்றவியல் வழக்குகளில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், தன்னை ஒரு மருத்துவர் எனப் போலியாகக் காட்டிக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, கிளிநொச்சியிலுள்ள குறித்த இடத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கு எல்.டி.டி.ஈ பயிற்சி முகாம் இயங்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும், அது ஒரு பயிர்ச்செய்கை நிலம் மட்டுமே என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே சந்தேகநபர் வேண்டுமென்றே பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார். பயங்கரவாதத்திற்கோ அல்லது இனரீதியான பிரிவினைகளைத் தூண்டுவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அமைச்சர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "10 ஏக்கர் நிலப்பரப்பை 20 ஏக்கராக விரிவுபடுத்தி அங்கு விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பகுதி தொடர்பிலேயே இந்தச் சர்ச்சை கிளப்பிவிடப்பட்டுள்ளது.
பளை வனவளத் திணைக்களத்திற்குரிய நிலத்தையே இவர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தியாகராஜா உட்படச் சிலருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அது அரசுக்குரிய இடம் என நாம் கூறினாலும், அது தமது சகோதரருக்குரிய இடம் என அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் வழக்கு நடக்கின்றது.
சோதனைக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினருக்கு இடையூறு விளைவித்தமைக்கு எதிராகவும்கூட வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டரீதியாக ஏழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
மேற்படி வனப்பகுதியில் நடப்பது பற்றி அரசாங்கத்திற்குத் தெரியாது என்றும் மௌனம் காக்கின்றது என்றும் தவறான தகவல்களைப் பரப்பி, சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலேயே குறித்த நபர் போலித் தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும், அங்கு புலி முகாமோ அல்லது குண்டு தயாரிப்பு நிலையமோ இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.