"போர் காலத்தில் நாட்டைவிட்டு இந்தியாவுக்குச் சென்றவர்கள் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு இருந்த அனைத்து இடையூறுகளும் நீக்கப்பட்டுள்ளன. அவர்களும் எமது நாட்டுப் பிரஜைகளே. அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பண்டாரவளையில் இடம்பெற்ற ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
“மத்திய மலைநாடு எங்களின் இதயம்; அதன் பாதுகாப்பு என்பது எமது நாட்டின் எதிர்காலமாகும். இதற்கான அவசியமான தலையீடுகளை நாம் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும்.
இதன் நிமித்தம் மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகார சபையை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இதற்குரிய சட்டமூலம் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அந்த அதிகார சபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.
ஏற்கனவே ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு எமக்குச் சில காலம் எடுக்கும். ஆனால், எதிர்காலத்தில் இத்தகைய அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க முடியும்; அதை நாம் செய்வோம்.
மலையக மக்களின் உரிமைகளை நாம் முழுமையாகப் பாதுகாப்போம். இவ்விஷயத்தில் இந்திய அரசாங்கமும் எமக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இதற்காக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
போர் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இருந்த சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்களும் எமது நாட்டின் பிரஜைகளே. இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் சிறப்பான, சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது முதன்மை நோக்கமாகும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.